மிட்டாய் கவிதைகள்!

தூரத்து உறவுகள்

July 23, 2013

uf34rqo8

ஒன்றும் அறியாத நேரம்
புத்தகப் பையைச் சுமக்கச் சொன்னாய்,
சிலகாலம் கழித்து விடுதியில்
தனியே விட்டுச் சென்றாய்!
என்னை சுமக்கச் சொல்லி
நீ சுகம் காண்கிறாய் என நினைத்து,
உள்மனதில் வெறுப்புடன் செய்தேன்!

ஒருநாளில் அதைக் கேட்க உன்னைத் தேடிவர
உன்முதுகில் இருந்த மூட்டை கண்டு
கண்ணீருடன் மதிபெண்ணையும் சேர்ந்து சுமந்தேன்!
அவர் சுமையை இறக்க எண்ணி,
வெளிநாட்டுத் தொழில் செய்ய நினைத்தேன்..
முகம் சுளிக்காமல் சட்டைப் பையில்
சேர்த்து வைத்த பணத்தையும் கொடுத்தார்!

கடத்திவிட்ட நாட்களைக் கணக்கு வைக்கவில்லை,
ஆனால் கடல்தாண்டி கண்களில் கண்ணீர்
கடலில்லா நாட்கள் ஒன்றோ இரண்டுதான்!

தாய்ச் சோறு தின்னவில்லை,
அப்பா பேச்சு கேட்கவில்லை,
மண் வாசம் ஏதுமில்லை,
என் மொழி பேசவும் ஆளில்லை,
வெளிநாட்டு மோகத்தில் சென்ற எனக்கு
நாடு திரும்பக் கூட சுதந்திரம் இல்லாமல்
உயிர் கொடுத்தோரே என் தூரத்து உறவுகளாக!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்